Do not feed on items that may attract disease/ illness
ஆத்தி்சூடி முன்பு ஓலைச்சுவடிகளில் வாழ்ந்த போதிலும், பின்பு காகிதத்தில் வளர்ந்த போதிலும், அதற்கு முகவுரை தேவைப்படவில்லை. ஆனால், இன்று கணினிக்குள் காலடி பதிக்கும் போது மட்டும், அதற்கு ஒரு முகவுரை தேவைப்படுகிறது. ஏனெனில், சற்றுமுன் வரை, நம் மழலைகளுக்கு அம்புலி காட்டி அமுது ஊட்டும்போதே, ஆத்திச்சூடியால் அறிவும் ஊட்டப்பட்டது. ஆனால், இன்றோ, மழலைகளின் மடியில் கணினி - அதில் காட்டப்படுகிறது அம்புலி. கூரைமேல் உலாவரும் நிலா - அதைப் பாராமல், Google'ல் தேடும் காலம் இதுவல்லவா! நிலவிற்கே தற்போது இணையத்தில் ஒரு முகவரி தேவைப்படுவதால் - இதோ, ஆத்தி்சூடிக்கு எழுதப்படுகிறது ஒரு முகவுரை.
ஔவையார் ஒருவரல்ல பலரென்றும், அவர்களில் யாரால் எப்பொழுது ஆத்தி்சூடி எழுதப்பட்டது என்பது இன்றளவும் விவாதத்திற்கு உரியதாகும். பெரும்பாலும் நம்பப்படுகிற கூற்று, பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்த ஒளவையாரால் எழுதப்பட்டது என்பதே. இன்றும் அதன் சிறப்பு குன்றாமைக்கு காரணம் - அதன்மூலம் செய்யத்தகுந்தவைகளும் செய்யத்தகாதவைகளும் (DO’s & DON’Ts) மிகவும் எளிய முறையில் ஒற்றை வரிகளில் உணர்த்தப்படுகிறது. 'தொட்டில் பழக்கம் - சுடுகாடு மட்டும்' என்பதை நன்குணர்ந்தவர் நம் ஒளவைப் பாட்டி. எனவேதான், நமக்கு குழந்தைப் பருவத்திலேயே நல்லன - தீயனவற்றை உணர்த்தி நல்ல பழக்க வழக்கங்களை நம் வாழ்வில் புகுத்திட அவரால் எழுதப்பட்ட சுவடி - ஆத்தி்சூடி.
இந்நூலுக்கு மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. பொதுவாக, மற்ற மொழிகளை கற்பிக்கும்போது, அதன் எழுத்துக்களை மனதில் பதிய வைக்க ஏதேனும் பொருட்களோடு ஒப்பிடுவர் (A for Apple). ஆனால், ஆத்திச்சூடி மூலம் தமிழ் எழுத்துக்களை கற்பதினால், எழுத்துக்கள் மட்டுமல்ல, நல்ல எண்ணங்களையும் மழலைகள் மனதில் பதிய வைக்க இயல்கிறது. இன்று, இது இணையத்தில் இணைக்கப்படுவதன் நோக்கமும், இது உங்கள் வீட்டுக் குழந்தைகளின் மனதில் சென்றடைய வேண்டும் என்பதுதான். ஒளவையாரின் வரிகள், அவர்கள் வாழ்வில் நல்லன பயக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு மிகவும் உண்டு. நீங்களும் அதே நம்பிக்கையுடன் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆத்தி்சூடி மூலம் எளிய வழியில் தமிழும் நற்பண்புகளும் கற்றுத் தருவீர்களாக.
'அறம் செய விரும்பு' என்ற ஆத்தி்சூடியின் முதல் வரியை தன் முகவரியாகக் கொண்ட நம் இணைய தளம், ஆத்தி்சூடியையே அடித்தளமாகக் கொண்டு உலகம் முழுதுமுள்ள தமிழ் ஆர்வலர்களை இணைக்கும் இன்னொரு கருவியாகத் திகழும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே. இதற்கு பெரிதும் உறுதுணையாக விளங்குவது இந்த இணைய தளத்தின் வடிவமைப்பேயாகும்.
இந்த இணைய தளத்தின் வடிவமைப்பை தமிழ் ஆர்வத்துடன் தன்னார்வத்தை கலந்திட்ட ஒரு மென்பொருள் கவிதை என்றே கூறலாம். இந்த வடிவமைப்பால், வாசகர்கள் இந்த தளத்தில் வந்து வாசித்து மட்டும் செல்லாமல், அவர்களை யோசிக்கவும் செய்து, அவர்களின் சிந்தனைச் சிதறல்களை பதிவும் செய்து, பின்வரும் வாசகர்களுக்கு மென்மேலும் சிறந்த கருத்துக்களை பல கோணங்களில் படைத்திட இயல்கிறது.
ஆத்தி்சூடி மற்றும் அதன் பொருள் தேடி வரும் வாசகர்கள், எவ்வித தங்கு தடையுமின்றி எளிய முறையில் இந்த இணைய தளத்தில் பயணிக்கலாம். தாம் வாசித்த பகுதியை மேலும் மெருகேற்ற எண்ணும் தமிழ் ஆர்வலர்கள், தம்மைப்பற்றி பதிவு செய்துகொண்டு, தம்மால் திருத்தப்பட்ட பகுதியையும் பதிவு செய்யலாம். இவ்வாறு திருத்தி சீரமைக்கப்பட்ட பகுதிகள் தளப் பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு வாசகர்களின் பங்களிப்பாக பிரசுரிக்கப்படும். மேலும், வாசகர்கள் தாம் பயணித்த பகுதியைப் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்யலாம். இவ்வாறு வாசகர்களின் பங்களிப்பின்மூலம் ஆத்தி்சூடியுடன் கருத்தாழம்மிக்க விளக்கங்களையும் விவாதங்களையும் விருந்தளிப்பதே இந்த இணைய தளத்தின் தலையாய நோக்கமாகும். இந்த நோக்கம் நிறைவேற வாசகர்களாகிய தாங்கள், தங்களின் கருத்துக்களை மறவாது பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.